திமுக கூட்டணிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திமுக கூட்டணிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட 10 முதல் 15 மாநிலங்களில் பீகாரைப் போல முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.
இந்த நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 2-ம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும். சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் ” என்று கூறினார்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.






