புதுக்கோட்டை, திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு

புதுக்கோட்டை, திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று கள ஆய்வு மேற்கொண்டும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார். அந்த வகையில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அவர் கார் மூலம் சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
பின்னர் நாளை (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு செல்கிறார். கீரனூர் அருகே மூகாம்பிகை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் காலை 11 மணி அளவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். விழாவில் ரூ.201 கோடியே 70 லட்சம் மதிப்பில் 103 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.223 கோடியே 6 லட்சம் மதிப்பில் 577 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும்,
ரூ.348 கோடியே 43 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் ரூ.773 கோடியே 19 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த வளர்ச்சி பணிகளில் அரசின் பல்வேறு துறைகளின் திட்டங்கள் அடங்கியுள்ளன.
பின்னர், மீண்டும் திருச்சிக்கு வந்து பொன்மலைப்பட்டியில் பாவை குழுமங்களின் அன்புச்சோலை என்ற முதியோர் இல்லத்தை பிற்பகல் 1 மணியளவில் திறந்து வைக்கிறார். அதன்பிறகு திருச்சி சுற்றுலா மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய உணவுக்கு பிறகு திருச்சி விமானநிலையம் சென்று, பிற்பகல் 3 மணியளவில் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.






