கோவை உலகப் புத்தொழில் மாநாட்டின் மூலம் பல தொழில் ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து நிறைவேற வாய்ப்பு


கோவை உலகப் புத்தொழில் மாநாட்டின் மூலம் பல தொழில் ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து நிறைவேற வாய்ப்பு
x

நாட்டின் மிகப்பெரிய புத்தொழில் மாநாடாக கோவை உலகப் புத்தொழில் மாநாடு அமைந்தது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் கடந்த 9-ந் தேதி உலகப் புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார். தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாடு எழுச்சி பெறும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த மாநாடு அமைந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து புத்தாக்க தொழில் நிபுணர்கள், நிறுவனங்கள், புத்தாக்க சிந்தனையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புத்தொழில் சூழல் செயல்பாட்டாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடக்க விழாவில், தமிழ்நாட்டில் முதலீட்டு சூழலை வலுப்படுத்துவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் ‘இணை உருவாக்க நிதியத்தை' முதல்-அமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் அதிகமாகி, உலகின் பிற இடங்களில் உள்ள துணிகர முதலீட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கு வழிவகுக்கும்.

அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானிய நிதிக்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கபட்டன. 2 நாட்கள் மாநாட்டில் 72 ஆயிரத்து 278 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இது நாட்டின் மிகப்பெரிய புத்தொழில் மாநாடாக அமைந்தது.

115 முதலீட்டாளர்கள் பங்கேற்று, 453 புத்தொழில் நிறுவனங்களிடம் தங்களது நிறுவனங்களை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் முதலீட்டு வாய்ப்புகள் வழிகாட்டுதல் மற்றும் இணைப்பு முயற்சிகள் உருவாக்கப்பட்டன. மாநாட்டுக்கு முன்பதாகவே ரூ.127.09 கோடி முதலீட்டு உறுதிப்பாடு கிடைத்தது. மேலும் பல ஒப்பந்தங்கள் அடுத்தடுத்த மாதங்களில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1,012 அரங்குகளுடன் புத்தொழில் மற்றும் புத்தாக்க கண்காட்சி நடைபெற்றது. 21 நாடுகளில் இருந்து அரங்குகள் அமைத்திருந்தனர். 12 பெரு நிறுவனங்கள், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த 8 புத்தொழில் இயக்கங்கள் பங்கேற்று இருந்தன. பன்னாட்டு தொழில் அமைப்புகள் மற்றும் முன்னணி பெரு நிறுவனங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உலகளாவிய அளவில் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் இலக்கை நோக்கி நகர்த்தும் முக்கிய அடித்தளமாக அமைந்தது.

மாநாட்டின் நிறைவு விழாவில் 2-ம், 3-ம் நிலை நகரங்களில் புதிய புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்தில் 10 நிறுவனங்களுக்கு அனுமதி ஆணைகளை மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story