ஆணவக் கொலைகளை தடுக்க ஆணையம்: திருமாவளவன் வரவேற்பு

அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சாதிய ஆணவப் படுகொலை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அதிகாரம் ஆகியவற்றைத் தருவதன் மூலமாக யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே சீர்திருத்த இயக்கங்கள் போராடியது, வாதாடியது. பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே கூடாது என சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம். இருக்கிறோம்.
ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும், அதன் அடிப்படையில் தனிச்சட்டம் இயற்றப்படும். அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில், ஆணவக் கொலைகளைத் தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதை விசிக வரவேற்கிறது. நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்பையில் சட்டமியற்றப்படுமென சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.






