தொடர் கனமழை: இருளில் மூழ்கிய பாம்பன் பாலம்; ராமேசுவரம் மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தீபாவளி

சுற்றுலா பயணிகள் மழையால் பாதிக்கப்பட்டபோதும், பாம்பன் பாலத்தில் நின்றபடி தங்களுடைய கேமராக்களில் படம் பிடித்து செல்கின்றனர்.
ராமேசுவரம்,
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு, காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புதிய ஆடைகளை உடுத்தி, இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டு, வாழ்த்துகளை பரிமாறி கொண்டு, மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனை முன்னிட்டு, ராமேசுவரத்தில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நகரின் மைய பகுதி மற்றும் முக்கிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி வைத்த பட்டாசுகளை வெடிக்க முடியாமல், கவலையடைந்து உள்ளனர்.
இந்நிலையில், தொடர் கனமழையால் ராமேசுவரம் பாம்பன் பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பாம்பன் சாலை பாலத்தில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் தொடர்ந்து பெய்த மழையால் சற்றே பாதிக்கப்பட்டனர்.
ஆனால், மழையால் ஏற்பட்ட இதமான சூழலில், பாம்பன் பாலத்தில் நின்றபடி, தங்களுடைய கேமராக்களில் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்தபடி செல்கின்றனர். எனினும், ராமேசுவர பகுதி மக்கள் தொடர் மழையால் தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.






