தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டில் டோக்கன் சிஸ்டத்தில் ஊழல்; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டில் டோக்கன் சிஸ்டத்தில் ஊழல்; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாரம்பரியமிக்க முறையில் மீண்டும் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுரை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணம் மதுரை மாவட்டத்தில் 4-வது நாளாக நடந்தது. அதில் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி பஸ்நிலையம் பகுதிக்கு வந்த அவரை புறநகர் மாவட்ட செயலாளரும், எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வரவேற்றார். பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது

எம்.ஜி.ஆர். இருக்கும்போது தைப்பொங்கல் அன்று விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதிலும் ஊழல் செய்கிறது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. அரசு வந்தவுடன் வேட்டி சேலை தரமாகவும் உரிய நேரத்திலும் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலையும் வழங்கப்படும். தி.மு.க. என்பது குடும்ப ஆட்சி. நாட்டு மக்களுக்கானது அல்ல. ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயலலிதா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் ரூ.7300 கோடிநிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு, உலகமே பாராட்டும் அளவுக்கு புகழ்பெற்றவை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஜல்லிக்கட்டு சிறப்புடன் நடப்பதற்குத் தேவையான உதவிகள் அனைத்தும் செய்துதரப்படும். முதல்வராக இருந்த போது நானே அலங்காநல்லூர் வந்து கோயில் காளையை அவிழ்த்துவிட்டு புகழ் சேர்த்துக் கொடுத்தோம். சோழவந்தான் வெற்றிலை என்றாலே அதற்கு தனிச்சிறப்பு உண்டு.

அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு டோக்கன் சிஸ்டம் கொண்டுவந்துவிட்டனர். உள்ளூரில் காளை வளர்த்தவர்களுக்கு எல்லாம் அதில் இடமில்லை. தி.மு.க. கட்சிக்காரர்களுக்கு யார் வேண்டுமோ அவர்களுக்கு டோக்கன் கொடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டு அதிலும் ஊழல் செய்கின்ற கட்சி தி.மு.க.. எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு ஜல்லிக்கட்டு நிர்வாகிகளை அழைத்துப்பேசி, அவர்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டு செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story