இருமல் மருந்து விவகாரம்: கைதான ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக கைதான ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சோதனை நடத்தி வருகிறது.
இருமல் மருந்து விவகாரம்: கைதான ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Published on

சென்னை,

பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளது.

இத்தனை பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த குறிப்பிட்ட இருமல் மருந்தின் பெயர் கோல்ட்ரிப்' என்பதாகும். இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ஸ்ரீசன் பார்மா என்பதாகும். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில்தான் இந்த மருந்து கம்பெனி உள்ளது. 22 குழந்தைகளை உயிர் பலி வாங்கிய சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலையில்லாத மரண சம்பவத்தை விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கில் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாரசியா ஜிதேந்திர ஜாட் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகோட்டின் மேஸ்ராம் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய தனிப்படை போலீசார் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் (வயது 75), சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனாநகர் 2-வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் ஸ்ரேசன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது.

இதைபோல மருந்து கம்பெனியை முறையாக கண்காணிக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அண்ணா நகர், பல்லாவரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com