நாய் குறுக்கே பாய்ந்ததில் சாலையில் விழுந்த தம்பதி, பஸ் மோதி பலி

மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
நாய் குறுக்கே பாய்ந்ததில் சாலையில் விழுந்த தம்பதி, பஸ் மோதி பலி
Published on

மதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடசுப்பு (வயது 56). இவர் சிக்கந்தர்சாவடி அருகே பாசிங்காபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பத்மாவதி(54). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் மும்பையில் வேலைபார்த்து வருகிறார். மகள் சென்னையில் உள்ளார்.

வெங்கடசுப்புவும் அவருடைய மனைவியும் நேற்று அதிகாலை தங்கள் வீட்டில் இருந்து சிக்கந்தர்சாவடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சிக்கந்தர்சாவடி காமாட்சிநகர் பகுதியில் சென்றபோது திடீரென ஒரு நாய் சாலையின் குறுக்கே பாய்ந்தது.

இதனால் நிலைதடுமாறிய வெங்கடசுப்பு மோட்டார் சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். அதற்குள் நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி சறுக்கி விழுந்தது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு டவுன் பஸ் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடசுப்பு பரிதாபமாக உயிரிழந்தார். பத்மாவதி படுகாயம் அடைந்தார்.

அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பத்மாவதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவத்துக்கு காரணமான நாயும் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com