சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு உடையில் அணியும் கேமரா

பயணிகளை சோதனை செய்யும் சுங்கத்துறையினர் இந்த கேமராவை தங்களுடைய சட்டையில் மாட்டி இருப்பார்கள்.
சென்னை,
நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளிடம் சோதனையிடும்போது சுங்க இலாகா அதிகாரிகள் கண்ணியமான முறையில் ஈடுபடவேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் விமான நிலையங்களில் சுங்க சோதனை செய்யும் அதிகாரிகள் பயணிகளை சோதனையிடும்போது நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கேமராவை தங்களது சட்டை பையின் அருகே அணிந்து இருக்க வேண்டும். அந்த கேமரா, சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைகள் நடத்துவதை வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்யும்.
அந்த பதிவுகளை கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு சேமித்து வைக்கப்படும். சுங்க சோதனையின்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதாக சுங்க இலாகா உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அல்லது சந்தேகங்கள் வந்தால் அந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்வார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி தென்னிந்தியாவில் முதலில் பெங்களூரு விமான நிலையத்தில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. தற்போது, சென்னை விமான நிலைய சுங்கஇலாகாவில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் முதற்கட்டமாக 8 கேமராக்களை, இந்திய நிதி அமைச்சகம், சுங்கத்துறைக்கு வழங்கி உள்ளது.
ஆனால் இது போதுமானது இல்லை என்பதால், மேலும் 24 கேமராக்கள் விரைவில் விமான நிலைய சுங்கத்துறைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் வருகை பகுதிகளில் சுங்கச் சோதனை பிரிவில் 2 வழிகள் உள்ளன. இந்த வழிகளில் பயணிகளை சோதனை செய்யும் சுங்கத்துறையினர் இந்த கேமராவை தங்களுடைய சட்டையில் மாட்டி இருப்பார்கள். இந்த திட்டம் படிப்படியாக திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, “சுங்க இலாகா அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு சோதனை நடத்தும்போது, அதனால் பாதிக்கப்படும் பயணிகளில் சிலர், சுங்கத்துறையின் மீது தவறான, உண்மை இல்லாத குற்றச்சாட்டுகளை கூறிவிடுகின்றனர். ஆனால் இந்த கேமராவால் அதுபோன்ற நிலை ஏற்படாது” என்றனர்.






