அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் டிராக்டர் மூலம் அழிப்பு: பெண் விவசாயி கண்ணீர்


அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் டிராக்டர் மூலம் அழிப்பு: பெண் விவசாயி கண்ணீர்
x
தினத்தந்தி 26 Oct 2025 1:37 AM IST (Updated: 26 Oct 2025 1:48 AM IST)
t-max-icont-min-icon

பயிரை காப்பாற்ற முடியாது என்பதால் அழித்து விட்டதாக பெண் விவசாயி கண்ணீருடன் கூறினார்.

தஞ்சாவூா்,

தஞ்சை அருகே உள்ள திருப்பூந்துருத்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜி என்ற பெண் விவசாயி. இவர் 4 ஏக்கர் விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து குறுவை சாகுபடி செய்திருந்தார். நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு பயிர்கள் அனைத்தும் சாய்ந்து மழை நீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டது. தொடர்ந்து மழை நீரில் பயிர்கள் மிதப்பதால் இனிமேல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அறுவடை செய்வதற்கும் கைகாசு போட்டு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் மனமுடைந்த விஜி, முளைத்த நிலையில் இருந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்தார். பார்த்து, பார்த்து விளைவித்த நெற்பயிர்கள் இப்படி வீணாகி விட்டதே? என அவர் கண்ணீர் வடித்தார்.

இது குறித்து விஜி கூறுகையில், நான் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தேன். சப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அதிக வட்டிக்கு பணம் வாங்கியும், குழுக்கடன், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியும் சாகுபடி செய்தேன். இதுவரை ரூ.1.80 லட்சம் வரை செலவு செய்து அறுவடை செய்து லாபம் பார்க்க வேண்டிய பயிர்கள் மொத்தமும் வீணாக போய் விட்டது. பயிரை காப்பாற்ற முடியாது என்பதால் அழித்து விட்டேன் என்று கண்ணீருடன் கூறினார்.

1 More update

Next Story