டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை


டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை
x

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்துக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மீனம்பாக்கம்,

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். சுமார் 24-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதன்பேரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு-கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

இதையடுத்து சென்னையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் மீனம்பாக்கம் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றன. மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் பயணிக்கும் வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான வாகனங்கள், விமான பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், பயணிகள் சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடிய, விடிய வாகன சோதனை

சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

சென்னையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்துக்குரிய வகையில் சிக்கியவர்களிடம் வாகனங்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

சென்னையில் சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினார்கள். பயணிகளின் உடைமைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

1 More update

Next Story