‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நத்தையால் பாதித்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நத்தையால் பாதித்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு
x

வேளாண்துறை அலுவலர்கள், வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் இணைந்து நத்தையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூர் கிராமத்தில் வயல்களில் நத்தைகள் புகுந்து கரும்பு, சவுக்கு, வாழை, தென்னை, பாக்கு, வெண்டை போன்ற பயிர்களை சேதப்படுத்தி வந்தன. எனவே நத்தையை கட்டுப்படுத்தி பயிர்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’யில் படத்துடன் வெளியானது.

இதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்துறை அலுவலர்கள், வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் இணைந்து நத்தையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்தனர். அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பவானி, தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துக்குமாரி, பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் சத்தியசீலன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரபாகரன், உதவி தோட்டக்கலை அலுவலர் மேனகா, உதவி திட்ட மேலாளர் தியாகராஜன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

நத்தைகளை கட்டுப்படுத்த தோட்டங்களை சுத்தமாகவும், ஈரப்பதம் குறைவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். தழைச்சத்து, யூரியா உரங்களை அதிகமாக உபயோகிக்க கூடாது. மெட்டல்டிஹைட் 25 - 35 கிலோ பயன்படுத்தி, உப்பு கரைசலை பயன்படுத்தி அழிக்க வேண்டும். சாம்பலுடன் சுண்ணாம்பு கலந்து பயன்படுத்த வேண்டும். காய்ந்த பயிர்களின் பகுதிகளை சேகரித்து அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும். நத்தைகளை சேகரித்து சூடான நீரில் அல்லது தீயிட்டு அழித்து விட வேண்டும்.

இதுபோன்ற ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொண்டு நத்தைகளை கட்டுப்படுத்துவதுடன் வருங்காலத்திலும் நத்தைகளின் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் என வேளாண்துறை அலுவலர்கள், வேளாண் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story