தீபாவளி பண்டிகை: கோவையில் இருந்து விமானங்களில் சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து விமானங்களில் சரக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை: கோவையில் இருந்து விமானங்களில் சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு
Published on

கோவை,

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, புனே, சீரடி உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சராசரியாக 32 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் தினமும் வந்து செல்கின்றனர். இதுதவிர உள்நாடு, வெளிநாடுகளுக்கு கோவை விமான நிலையத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகத்தில் இருந்து சரக்குகளும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் இருந்து விமானத்தில் சரக்குகள் ஏற்றுமதிக்கான 'புக்கிங்' அதிகரித்து உள்ளது. இதுகுறித்து கோவை விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, உள்நாட்டு பிரிவில் வழக்கமாக மாதந்தோறும் 500 டன்னுக்கு கீழ் சரக்குகள் கையாளப்படும். ஆனால் கடந்த மாதம் 547 டன்னாக அதிகரித்தது.

அதுவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது சரக்கு புக்கிங் அதிகரித்துள்ளதால் இந்த மாதம் 625 டன்களுக்கு மேல் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டு உள்ளன. வழக்கமாக காய்கறி, உணவு பொருட்கள் தான் அதிக அளவில் அனுப்பிவைக்கப்பட்டு வந்தன. தற்போது இனிப்பு, கார வகைகள் மற்றும் செல்போன் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பல்வேறு பொருட்கள் அதிகம் அனுப்பி வைக்கப்படுகின்றன என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com