நெல் கொள்முதல்: தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு


நெல் கொள்முதல்: தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

விவசாயிகளின் வேதனையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டினார்.

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில் 40 சதவீத அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கும் பணியும் நடைபெறவில்லை. இந்தநிலையில் கொட்டித் தீர்க்கும் கனமழையில் லட்சக்கணக்கான டன்கள் நெல் நனைந்து வீணாகியுள்ளது. தி.மு.க. அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில், 20 லட்சம் டன் நெல் வீணாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல் கொள்முதல் செய்யாமல் சுமார் 20 நாட்கள் காலதாமதம் ஆனதால் தொடர் மழையால் நெல் முளைத்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை உரிய நேரத்தில் விற்க முடியாமல் பெரும் சோகத்திற்கு ஆளாகி தவிக்கின்றனர்.

ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் வழக்கம்போல் புது, புது காரணங்களை தேடிபிடித்து கூறி வருகின்றனர். விவசாயிகளின் வேதனையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் நடந்து கொள்ளும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே தி.மு.க. அரசு சாக்குபோக்கு கூறுவதை கைவிட்டு டெல்டா மாவட்டங்களில் போர்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்திட வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story