தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மதவாத, பிளவுவாத கட்சிகளை காலூன்ற விடாமல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கூறினார்.
திருப்பூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நவம்பர் புரட்சி தின பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கலந்து கொண்டு பேசியதாவது:-
கோவை, மதுரைக்கு வர வேண்டிய மெட்ரோ ரெயில்கள் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக தமிழக முதல்-அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பா.ஜனதாவை ஆதரிக்காத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது மட்டுமல்லாது, கவர்னர்கள் மூலமாக அந்த மாநில அரசுகளை உதாசினப்படுத்துகிறது.
நாடு முழுவதும் தற்போது உள்ள அரசியல் சூழலில் தமிழ்நாடு மாடல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பாசிச கூட்டணியை எதிர்கொள்ள மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் அதற்கு உதாரணமாக தி.மு.க. கூட்டணி செயல்படுகிறது.
மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். அதுவே நமது நோக்கம், இலக்கு. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை மேலும் பலம்பொருந்தியதாக மாற்றி, வரும் சட்டமன்ற தேர்தலில் மதவாத, பிளவுவாத கட்சிகளை காலூன்ற விடாமல் செய்ய வேண்டும். இதேபோல் கேரளா, ஒடிசா, புதுச்சேரி மாநில தேர்தல்களிலும் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






