எடப்பாடி பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகதான்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்


எடப்பாடி பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகதான்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
x
தினத்தந்தி 27 Nov 2025 10:34 AM IST (Updated: 27 Nov 2025 12:03 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சென்னை,

இயற்கைவளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஈரோட்டில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் கொட்டியிருக்கிறார். மத்திய அரசு விவகாரம் என்றால், கும்பகர்ண தூக்கம் போடும் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அரசு என்றால் வீராவேசம் வந்துவிடுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள்தான்!

நெல்மணிகள் நனைந்துவிட்டது என ஸ்பாட்டுக்கு போய் ஓரங்க நாடகம் போட்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு நெல் ஈரப்பத அளவினை 22 சதவிகிதமாக உயர்த்தாததைக் கண்டிக்காமல் எங்கே போனார்?. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது எங்கிருந்தார்?. மோடி அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, சாகுபடி, பயிர்க்காப்பீடு பற்றியெல்லாம் பேச அருகதை இருக்கிறதா?. கஜா புயலின் போது பயிர்கள் எல்லாம் நாசம் ஆன நேரத்தில், மாமனார் வீட்டு விருந்தில் கொண்டாட்டம் போட்ட எடப்பாடி பழனிசாமி எல்லாம் விவசாயியா?.

நெல் கொள்முதலுக்குரிய ஈரப்பத அளவை உயர்த்தாமல் வஞ்சிப்பது மத்திய பாஜக அரசு. அதை எதிர்த்துக் கேட்கத் திராணியில்லாத, தைரியமில்லாத எடப்பாடி பழனிசாமி வீணாகத் தமிழ்நாடு அரசின் மீதும் முதல்-அமைச்சர் மீதும் அவதூறை பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்களா என்ன?. விவசாயத்தை அழித்து விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் நோக்கிலான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்.

கோவை, மதுரைக்கு மெட்ரோ வர வேண்டும் என்று என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதையே பெரும் சாதனையாகத் தம்பட்டம் அடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் ஆட்சியில் இருந்தபோது அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸைக் கொண்டு வரத் திராணி இல்லாத எடப்பாடி பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும்.

டிவி-யை பார்த்து ஆட்சி நடத்திய கையாலாகாத, நிர்வாகத் திறனற்றவர் என்று இந்தியாவே சிரித்த முதல்-அமைச்சர்தானே எடப்பாடி பழனிசாமி. கால்கள் மாறுவதையும் கார்கள் மாறுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ரோசம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷாவை பார்த்துவிட்டு வரும் போது ஏசி காரிலும் ’குப்’ என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை மறந்துவிட்டீர்களா பழனிசாமி?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story