திமுக ஆட்சி தான் உழவர்களின் சாபக்கேடு - பாமக செய்தித் தொடர்பாளர்

கோப்புப்படம்
உழவர்களையும், மக்களையும் ஏமாற்ற முயல்வதற்காக திமுக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கே. பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிர்வாகத்தால் உழவர்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு, அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குவதாக நடத்திய நாடகத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அம்பலப்படுத்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரது அடிப்பொடிகளில் ஒருவரான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை ஏவி விட்டு, அவதூறுகளை அள்ளித் தெளிக்கச் செய்கிறார்.
அன்புமணி அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பதிலளிக்க முடியாமல் அவதூறு பரப்பும் திமுகவின் அற்பத்தனம் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் உழவர்களுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை; வேளாண்துறை வளர்ச்சியடையவில்லை; கடந்த இரு ஆண்டுகளில் வேளாண்துறை வளருவதற்கு பதிலாக வீழ்ச்சி அடைந்துள்ளது; மழை & வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது தான் திமுக அரசின் மீது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆகும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், அதை மறுக்க முடியாத திமுகவின் ஆட்சித் தலைமை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தைத் தூண்டி விட்டு பதிலளிக்கச் செய்திருக்கிறது. புள்ளி விவரங்கள் என்றால் என்னவென்றே தெரியாத எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் அறிவாலயத்தின் முற்றத்தில் எவரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை தமது பெயரில் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவதூறுகளும், உளறல்களும் தான் நிறைந்துள்ளனவே தவிர, குற்றச்சாட்டுகளுக்கான பதில்களை வலைவீசித் தேடித் தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருப்பவர்களுக்கு ஆட்சியின் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் துணிச்சலும், அவற்றுக்கு பதிலளிக்கும் தெளிவும் வேண்டும். ஆனால், அந்தத் தகுதிகள் இல்லாத ஆட்சித் தலைமை, அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஏவி, எங்கள் தலைவர் அன்புமணி அவர்கள் மீது அவதூறு மழை பொழிய விட்டு, அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறது.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத காலிப் பெருங்காய டப்பாக்களிடமிருந்து ஆரோக்கியமான அரசியலை எதிர்பார்க்க முடியாது. திமுகவின் அவதூறுகளுக்கு அவர்களின் மொழியிலேயே பதிலடி கொடுக்க முடியும். இன்னும் கேட்டால் அத்தனைக்கும் திமுகவினர் தகுதியானவர்கள் தான். ஆனால், ஆரோக்கியமான அரசியல் தான் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதுடன், அதற்கெல்லாம் நல்லுதாரணமாகவும் திகழ்ந்து வருகிறார். அத்தகைய குணம் படைத்த அன்புமணி அவர்கள் பற்றி பேசுவதற்குக் கூட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுகவினருக்கு எந்த அருகதையும் கிடையாது.
திமுக ஆட்சியில் வேளாண்துறை வளர்ச்சியடையவில்லை என்பதும், கடந்த இரு ஆண்டுகளில் வேளாண் துறை எதிர்மறை வளர்ச்சியை அடைந்து வருகிறது என்பது தான் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் குற்றச்சாட்டு. தமிழகம் 15.90% பொருளாதார வளர்ச்சியை அடைந்து விட்டது என்று எந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் திமுக அரசு வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியதோ, அதே இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தான் வேளாண்துறை வீழ்ச்சி குறித்த புள்ளி விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
ஆனால், சம்பந்தமே இல்லாத தகவல்களை வைத்துக் கொண்டு 2011ஆம் ஆண்டிலிருந்து வேளாண்துறை 9.97% வளர்ச்சி அடைந்து விட்டதாக எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உளறியிருக்கிறார். திமுக ஆட்சியின் தோல்வியை சுட்டிக்காட்டினால், அதிமுக ஆட்சியில் அடைந்த வளர்ச்சியின் பின்னால் அமைச்சர் பதுங்கிக் கொள்வது ஏன்?
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது தான் மருத்துவர் அன்புமணி அவர்களின் குற்றச்சாட்டு ஆகும். 2024-ஆம் ஆண்டு நவம்பர், திசம்பர் மாதங்களில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்-பீடு வழங்குவற்கான அரசாணை 2025-ஆம் ஆண்டு திசம்பர் 25-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் தான் உழவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் அன்புமணி அவர்கள் 10 முறை அறிக்கை வெளியிட்ட பிறகு, ஓராண்டு கழித்து பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது தான் உழவர்களின் நலன் காக்கும் அரசா? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும்.
2025-ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் பெய்த மழை மற்றும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு வழங்கப்படவில்லை என்று கடந்த 13-ஆம் தேதி ஆறாம் முறையாக மருத்துவர் அன்புமணி அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தார். அதன்பிறகு தான் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அரசாணை கடந்த 14-ஆம் தேதி வெளியிடப்பட்டதாக அமைச்சர் பன்னீர்செல்வமும், 15-ஆம் தேதி வெளியிடப்பட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கூறுகிறார்கள்.
இதன் மூலம் அன்புமணி அவர்களின் குற்றச்சாட்டை முதல்-அமைச்சரும், அமைச்சரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அன்புமணி அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் இதுவும் சாத்தியமாகியிருக்கிறது. இப்படியாக தங்களின் தோல்வியைக் கூட, வெற்றியாகக் கூறிக் கொண்டு உழவர்களையும், மக்களையும் ஏமாற்ற முயல்வதற்காக திமுக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
நெல் கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த மழையில் கோடிக்கணக்கான நெல் மூட்டைகளை மழையில் நனையச் செய்து உழவர்களின் வயிற்றில் அடித்த திமுக அரசு, உழவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக வீண் பெருமை பேசுவது வெட்கக் கேடு.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் உழவர்கள் நலன் & வேளாண்மை தொடர்பாக மொத்தம் 56 வாக்குறுதிகளை அளித்திருந்த திமுக அவற்றில் வெறும் 8 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. 7 வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றிய திமுக அரசு, 41 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உழவர்களுக்கான வாக்குறுதிகளில் 86 விழுக்காட்டை நிறைவேற்றத் தவறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் உழவர் நலன் பற்றி பேச தகுதி கிடையாது.
எந்த வகையில் பார்த்தாலும் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி உழவர்களின் வாழ்வில் சாபக்கேடு தான். பன்னீர்செல்வம் போன்ற உளறல் நாயகர்களை வைத்து அன்புமணி அவர்கள் மீது எத்தனை அவதூறுகளை பரப்பினாலும் உழவர்களுக்கு செய்த துரோகத்தை திமுக அரசால் மறைக்க முடியாது. இந்த துரோகங்களுக்கு வரும் தேர்தலில் உழவர்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






