திமுக முப்பெரும் விழா: கரூரின் கோடங்கிபட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்

திமுக முப்பெரும் விழா நடைபெறுவதையொட்டி, கரூரின் கோடங்கிபட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரூர்
பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணாபிறந்த நாள் விழா, தி.மு.க. உதயமான நாள் ஆகியவை தி.மு.க. சார்பில் முப்பெரும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தி.மு.க .முப்பெரும் விழா கரூர் பைபாஸ் சாலையில் உள்ள கோடங்கி பட்டியில் இன்று நடைபெற்றது.
விழா மேடைக்கு முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு வந்தார். அப்போது மைதானம் முழுவதும் திரண்டு இருந்த தி.மு.க. தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொண்டர்களுக்கு நடுவே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதனை தொடர்ந்து பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
இந்த முப்பெரும் விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர். மாநாட்டிற்கு பேருந்துகள், வேன்களில் திமுகவினர் பலர் வருகை தந்த நிலையில், அவர்களின்வாகனங்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சென்றதால், கரூரின் கோடங்கிபட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது






