மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ நிற்காதீர்கள்: நெல்லை தலைமை பொறியாளர் அறிவுறுத்தல்

இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவி பொருத்த வேண்டும் என நெல்லை மண்டல தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் மின் விபத்துக்களை தவிர்த்திடல் மற்றும் பொதுவான பாதுகாப்பு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளர் (பகிர்மானம்) சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழைக்காலத்தில் மின்விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்மாற்றிகள், மின்கம்பங்கள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
2. மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
3. இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். கான்கீரிட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள். இடி, மின்னலின் போது, மின்சாதனங்கள், கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல் மற்றும் கிரில் அருகில் இருக்கக்கூடாது.
4. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை அறவே தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்குவதை தவிர்க்கவும்.
5. காற்று மற்றும் மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அவற்றை வெட்டி அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும்.
6. மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ கூடாது. மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.
7. மின் நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து மின்இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை (RCD-Residual Current Device) பொருத்த வேண்டும். மின்கசிவு தடுப்பு கருவியானது மின்இணைப்புகளில் ஏற்படும் மின்கசிவினை கண்டறிந்து உடனடியாக மின்விநியோகத்தை நிறுத்தி மின்விபத்து ஏற்படாமல் தவிர்த்திட ஏதுவாக இருக்கும்.
8. தரைதளத்தின் மேல் கட்டிடம் கட்டும் பொழுது அருகில் மின் வயர் சென்றால் போதிய இடைவெளி (பக்கவாட்டிலும்/உயரத்திலும்) இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். போதிய இடைவெளி இல்லாதபட்சத்தில் மின் வாரியத்தை அணுகி மின்பாதையை மாற்று வழியில்கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவும்.
9. புதியதாக கட்டிடம் கட்டும் பொழுது கட்டுமான இடத்தின் அருகில் போதிய இடைவெளியில் மின் பாதை இருப்பினும் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து பாதுகாப்புடன் வேலை செய்யவும். மேலும் கான்கிரீட் இயந்திரங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இயக்கும் பொழுது மிகவும் கவனமாக இயக்கவேண்டும். மேலும் கட்டிடங்களுக்கு பூச்சு பெய்ண்டிங் செய்யும் பொ/ழுது கட்டிடத்தின் அருகில் போதிய இடைவெளியில் மின் பாதை இருந்தாலும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து பாதுகாப்புடன் வேலை செய்யவும்.
10. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும், மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களுக்கும், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கும் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
11. மின்தடை தொடர்பான புகார்களுக்கும், இயற்கை இடர்பாடுகளின் போது அவசரகால உதவிக்கும் மற்றும் மின்விநியோகம் சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் "மின்னகம்" மின் நுகர்வோர் சேவை மையத்தினை 94987-94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து மின்சார விபத்துக்களை தடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






