திருச்சியில் இருந்து புறப்பட தயாரான விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த டாக்டரால் பரபரப்பு

திருச்சி விமான நிலைய போலீஸ் நிலையத்தில் வைத்து டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.15 மணிக்கு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது, திருச்சியை அடுத்த இருங்களூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டாக்டர் ஒருவர், விமானத்தின் உள்ளே வந்து அமர்ந்தபோது, அவசர வழி கதவை திறந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து பணியாளர்கள் அவரை விமானத்தில் இருந்து இறக்கி விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி விமான நிலைய போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பிறகு, அவர் தவறுதலாக நடந்ததாக கூறியதை தொடர்ந்து, அவரிடம் மன்னிப்பு கடிதம் பெற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் திருச்சி விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த விமானம் 7.30 மணிக்கு பதிலாக 8.30 மணிக்கு திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.






