ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் துணையோடு கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருப்பூர்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: -
அவர் பேசும்போது கூறியதாவது:-
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையும். அ.தி.மு.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடிக்கு வரி முறைகேடு நடந்துள்ளது. அதை தி.மு.க. அரசே கண்டுபிடித்துள்ளது. வரியில் ஊழல் செய்த அரசு தி.மு.க. அரசு. ஆடு, மாடு, குதிரை, பன்றிக்கு கூட வரி போட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. கஞ்சா, போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை நாங்கள் சட்டமன்றத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். ஆனால் முதல்-அமைச்சர் கண்டுகொள்ளவில்லை. தமிழக இளைஞர்கள் போதைக்கு அடிமையானது தான் இந்த ஆட்சியின் சாதனை. போதைக்கு அடிமையாகும் குழந்தைகளின் பெற்றோர் எந்த அளவுக்கு வேதனைப்படுவார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையோடு கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை நடக்கிறது. இதனால் காவல்துறையினர் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப்பொருட்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். கஞ்சா போதையால் சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் தினமும் தமிழகத்தின் கொலை நிலவரத்தை பார்க்கும் அவல நிலை உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.






