முதலாளிக்கு நான்தான் சிறந்த அடிமை என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி: கனிமொழி எம்.பி. பேச்சு


முதலாளிக்கு நான்தான் சிறந்த அடிமை என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி:  கனிமொழி எம்.பி. பேச்சு
x

பா.ஜ.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கப்படும் மக்களின் பெயர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதனை செய்கிறார்கள் என கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி,

இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வுக்கு (S.I.R.) எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவரான கனிமொழி தலைமையில், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., இந்த எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்த்து ஏன் திராவிட முன்னேற்ற கழகமும் அதன் கூட்டணி இயக்கங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிறது? வாக்காளர் பட்டியல் சீராய்வு செய்யப்பட்டதே இல்லையா என்று கேட்டால், செய்துள்ளனர். ஆனால், இதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டில் சீராய்வு செய்யப்பட்டபோது, மக்களிடம் படிவங்களை சமர்ப்பிக்க 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இன்றைக்கு, ஒரு மாதத்திற்குள் படிவங்களை கொடுக்க வேண்டும்; மேலும், அவற்றை 10 நாட்களுக்குள் திருப்பி பெற வேண்டும் என கூறப்படுகிறது.

ஒரு வேளை வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயராவது வெளியேற்றப்பட்டால், உங்களுடைய பெயரை மறுபடியும் ஏற்றுக்கொள்வதற்கு பல பிரச்சனைகள் என்ற நிலை உள்ளது. தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது, இத்தனை மாதங்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது தெரியவில்லை.

தற்போது, கடைசி நேரத்தில் இந்த எஸ்.ஐ.ஆர்- யை கொண்டு வருகிறார்கள். உண்மையில், S.I.R. என்பது பா.ஜ.க.வின் அரசின் கண்ணோட்டத்தில் இது ஒரு எக்ஸ்க்ளுசிவ் செஷன் (Exclusive Session) வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காகவே செய்யப்படும் சீராய்வாகும்.

அரியானா, மராட்டியம், பீகார் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே நிறைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கப்படும் மக்களின் பெயர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதனை செய்கிறார்கள். இதில் மிக பெரிய ஆபத்து இருக்கிறது.

சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில், ஒருவர் தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால், சரியான காரணம் இல்லையென்றால், அவர்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடையாது. அதேபோல், நம்முடைய பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டால், நாளை இப்படிப்பட்ட ஒரு சட்டம் கொண்டு வந்தால், நாம் இந்திய குடிமக்களாக வாழும் உரிமை இருக்குமா அல்லது அது பறிக்கப்படுமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

இங்கே பேசியவர்கள் எல்லாம் சொன்னார்கள், வாக்குரிமை என்பது நம்முடைய அரசியல் சாசனத்தில் நமக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை. உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால், அந்த உரிமை எப்படி கிடைக்கும்? அந்த உரிமை இல்லாமல் இருந்தால், நாளைக்கு நீங்கள் தேர்தல் வாக்களிக்க முடியாது. அவ்வாறு இருந்தால், நாம் எப்படி “குடிமகன்/குடிமகள்” என்று சொல்லிக்கொள்ள முடியும், நாளைக்கு நாம் குடும்ப அட்டை வாங்க முடியுமா? பாஸ்போர்ட் வாங்க முடியுமா? பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியுமா? இவை எல்லாம் கேள்விக்குறியாகிவிடும்.

அதுமட்டுமில்லை, பீகாரில் இஸ்லாமியர்கள், தலித் மக்கள், பெண்கள் என 68 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு யாரும் வாக்களிக்க தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், லட்சக்கணக்கான மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு, தொகுதி மறுசீரமைப்பு செய்ய உள்ளார்கள். பின்னர் சொல்வார்கள்,“தமிழ்நாட்டில் வாக்காளர்கள் குறைந்துவிட்டார்கள், அதனால் உங்களுக்கு 39 தொகுதி எதற்கு?” என்று.

இவற்றையெல்லாம் சிந்தித்து பாருங்கள் — நம்முடைய உரிமைகளை, நம்முடைய பிரதிநிதிகளின் உரிமைகளை, தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து பறித்து கொண்டு இருக்கும் ஆட்சி பா.ஜ.க. தான். இதனை நாம் மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது.

பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் வருவதற்கு முன்னால் ஏன் இந்த எஸ்.ஐ.ஆர்.-யை செய்கிறீர்கள் என்று கேட்டால், பா.ஜ.க.வை எதிர்த்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வழக்கு போட்டால், “இந்த எஸ்.ஐ.ஆர். வேணும் என்று ரொம்ப நல்லவர் வழக்கு போட்டிருக்கிறார்.

“முதலாளிக்கு நான்தான் சிறந்த அடிமை” என்று சொல்லி கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு வழக்கை போட்டு, எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குரிமையை திருடக்கூடிய, அடிப்படை உரிமையை நசுக்கக்கூடிய எஸ்.ஐ.ஆர். வேணும் என்று சொல்ல கூடிய ஒரு நிலை அ.தி.மு.க.விற்கு இருக்கிறது.

நாம் தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்ள முடியும், மிகப்பெரிய ஒரு படை நம்முடன் இருக்கிறது. ஆனாலும், யாரை எதிர்த்து நாம் போராடி கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். மக்களின் உரிமைகளை பறிக்க நினைப்பவர்களை, மக்களின் மொழியை ஒழிக்க நினைப்பவர்களை, பேச்சுரிமையை தடுக்க நினைப்பவர்களை, மதத்தின் ரீதியாக சாதி ரீதியாக மொழியின் ரீதியாக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்க கூடியவர்களை எதிர்த்து நாம் போராடி கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

நாளைக்கு உங்களுடைய அடிப்படை உரிமைகள், அரசாங்கம் மக்களுக்கு தரக்கூடிய எத்தனையோ திட்டங்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டும் என்றால், உங்களுக்கு இந்த வாக்காளர் அட்டை அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், அத்தனை பேரும் சேர்ந்து நம்முடைய உரிமைகளுக்காக போராடுவோம், இதை எதிர்த்து நிற்க கூடிவர்களை களத்திலிருந்து விரட்டியடிப்போம் என்று பேசினார்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி. சண்முகம், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு செயலாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மெபூப், ஒட்டப்பிடாரம் சட்டசபை உறுப்பினர் சி.வி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டசபை உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் சட்டசபை உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

1 More update

Next Story