டிடிவி தினகரனுடன் கை குலுக்கிய எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் வந்தடைந்தார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 2.15 மணிக்கு சென்னைக்கு வருவார் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவரது வருகையில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், 2.40 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், டி.ஜி.பி. வெங்கட்ராமன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவரது வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகம் வந்தடைந்தார்.
மதுராந்தகம் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனுவாசன், தலைமைச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் தங்கமணி பா.ஜ.க. மற்றும் என்.டி.ஏ. கூட்டணி கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக பொதுக்கூட்ட மேடையில் டிடிவி தினகரனுடன் எடப்பாடி பழனிசாமி கை குலுக்கினார். மேடைக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் முகம் மலர வரவேற்றார். தொடர்ந்து ஒரே மேடையில் இருவரும் அமர்ந்துள்ளனர். முன்னதாக டிடிவி தினகரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தண்ணீர் பாட்டில் கொடுத்தார்.






