சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்

உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மாஸா, கெத்தா... இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்; அமைச்சர் எ.வ.வேலுவிடம் வேலையை ஒப்படைத்தால் கவலைப்படவே தேவையில்லை. என்னதான் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எ.வ.வேலுவுக்கு நன்றி கூறினாலும்; நானும் ஒருமுறை மீண்டும் நன்றி கூறுகிறேன். இளைஞர் அணி மாநாட்டை பார்க்கும்போது டைம் டிராவல் செய்து அரை நூற்றாண்டுக்கு பின்னோக்கி சென்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. உங்கள் எனர்ஜி எனக்கு வந்துள்ளது.
இளைஞர் அணியை வளர்த்தெடுக்க தமிழகம் முழுவதும் பயணம் செய்தோம். எடுத்தோம்; கவிழ்த்தோம் என எதையும் செய்யவில்லை. மக்களை சந்தித்து களத்தை வளர்த்தோம். சந்திக்காத தடைகள், துன்பங்கள், துரோகிகள் இல்லை. பிற்போக்கு கருத்துகள் தொற்று நோய் போல் பரவும். டீக்கடைகள், சலூன்கடைகளை அரசியல் மேடைகளாக மாற்றி மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டினோம். ஏ தாழ்ந்த தமிழகமே என கவலைப்பட்ட காலத்தை மாற்றி, இப்போது திரும்பிப் பாருங்கள் தமிழ்நாட்டை என சொல்லுகிற காலத்திற்கு நாம் வந்துள்ளோம்.
உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என்று எதிரிகள் புலம்புகிறார்கள். தம்பி உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து பவர் புல்லாக செயல்படுகிறார்; இன்னும் சொல்லப்போனால் இறங்கி அடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அரசியல் அறிவை, அறிவியக்கத்தை வளர்த்தெடுக்கிறார் உதயநிதி ஸ்டாலின். நல்ல அரசியலருக்கான அடையாளம் அதுதான். வலதுசாரிகள் ஆக்ரோஷத்துக்கு பதிலடி நமது கொள்கைகள் தான். ஒட்டுமொத்த நாட்டையும் காக்கும் கடமை நம்மிடம் உள்ளது.
பீகாரை போல தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சொல்கிறார். அவருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.. ‘அமித்ஷா அவர்களே உங்களுடைய சங்கிபடையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது; தமிழ்நாட்டை வெல்ல முடியாது’.அன்பாக வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடி பணிய மாட்டோம். எதிர்த்து வென்று காட்டுவோம். நாட்டின் பன்முகத்தன்மையை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
வரவிருக்கு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற நீங்கள் (இளைஞர் அணி) அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திமுக அரசின திட்டங்களைள், சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் ஆதரவோடும்; மக்கள் ஆதரவோடும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






