பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சென்னை,
டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, விவசாயிகள் மும்முரமாக பயிர் காப்பீடு செய்து வந்தனர்.
அத்துடன், பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களில் பல காரணங்களால் இன்னும் அதிகளவு விவசாயிகள் காப்பீடு செய்யாமல் உள்ளனர். அதனால் காப்பீடு செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, வருகிற 30-ம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.






