டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி பெண் மருத்துவரிடம் ரூ.83 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கோப்புப்படம்
பண மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து டிஜிட்டல் கைது செய்து உள்ளதாக மர்ம நபர் மிரட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் 86 வயது பெண் மருத்துவர். இவர், ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து தற்போது வயது முதிர்வு காரணமாக வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் பெண் மருத்துவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு மர்மநபர் ஒருவர் பேசினார். அவர் மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், பண மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உங்களை டிஜிட்டல் கைது செய்து உள்ளதாகவும், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துள்ள ரூ.83 லட்சத்தை நான் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதைக்கேட்டு பயந்துபோன பெண் மருத்துவர் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருந்த ரூ.83 லட்சத்தை அவசரமாக எடுத்து மர்மநபர் தெரிவித்த வங்கிக் கணக்குகளில் செலுத்தி உள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






