வேலூரில் பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை


வேலூரில் பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை
x

2022ம் ஆண்டு பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர், தனது சக டாக்டருடன் 2022 மார்ச் 16-ம் தேதி இரவு காட்பாடியில் உள்ள திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து, ஆட்டோவில் வேலூருக்குச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் இருந்தவர்கள் இருவரையும் கத்தி முனையில் பாலாற்றங்கரைக்கு கடத்திச் சென்று, ஆண் டாக்டரை தாக்கிவிட்டு, பெண் டாக்டரை அந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது.

மேலும், ஆண் டாக்டரிடம் இருந்து பறித்த ஏடிஎம் கார்டைப்பயன்படுத்தி ரூ.40 ஆயிரத்தை எடுத்துள்ளனர். இருவரிடம் இருந்த செல்போன், தங்கச்சங்கிலியையும் பறித்துக்கொண்டு, அடுத்த நாள் அதிகாலை இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சொந்த மாநிலமான பீகார் சென்று, அங்கிருந்து வேலூர் எஸ்.பி.யின் மின்னஞ்சல் முகவரிக்குப் புகார் அனுப்பினார். அதன்பேரில், வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் (20), பரத் (18), மணிகண்டன் (21), சந்தோஷ்குமார் (22) மற்றும் 17 வயது 6 மாதங்கள் நிரம்பிய சிறுவன் என 5 பேரைக் கைது செய்தனர்.

வேலுார் மகளிர் நீதிமன்றத்தில் ஜன.30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா, குற்றவாளிகளுக்கு தலா, 20 ஆண்டுகள் சிறை, தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சிறுவனுக்கு இன்று 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.23 ஆயிரமும் அபராதம் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

1 More update

Next Story