விசைப்படகு பழுதானதால் நடுக்கடலில் 11 நாட்கள் பரிதவித்த மீனவர்கள்.!

31 மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
மங்களூரு,
கோவாவில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சான்ட் ஆண்டன் என்ற மீன்பிடி விசைப்படகில் 31 மீனவர்கள் கடந்த 13-ந்தேதி அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுக எல்லையில் சென்றபோது திடீரென்று அந்த விசைப்படகின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அவர்களை யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் நடுக்கடலில் விசைப்படகு மாயமானது குறித்து கடந்த 24-ந்தேதி மங்களூருவில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. இதனால் கடலோர காவல் படையினர், மாயமான படகை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வானிலை மாற்றம், கடல் சீற்றம் காரணமாக விசைப்படகின் தொடர்பு கடலோர காவல் படையினருக்கு கிடைக்கவில்லை.
இதையடுத்து மீட்பு விமானம் மூலம் மாயமான விசைப்படகை தேட கடலோர காவல் படை முடிவு செய்தது. அதன்படி கொச்சியில் இருந்து ‘டோர்னியர்’ என்ற மீட்பு விமானம் வரவழைக்கப்பட்டது. அந்த மீட்பு விமானம் மூலம் நடுக்கடலில் மாயமான விசைப்படகை தேடும் பணி நடந்தது. மீட்பு விமானம் மூலம் விசைப்படகின் இருப்பிடம் கண்டறியப்பட்டது. புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்தில் இருந்து 100 கடல் மைல் தொலைவில் அந்த விசைப்படகு தத்தளித்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதுபற்றி கடலோர காவல் படைக்கு மீட்பு விமானத்தில் சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர காவல் படையினர் கஸ்தூர்பா காந்தி என்ற மீட்பு படகு மூலம் விசைப்படகு தத்தளித்து கொண்டிருந்த இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு விசைப்படகு தத்தளித்து கொண்டிருந்தது தெரியவந்தது. நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது விசைப்படகின் ‘ஸ்டீயரிங் கியர்’ செயலிழந்ததால் நகர முடியாமல் நின்றது. மேலும் விசைப்படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவியும் செயலிழந்ததுடன், திசை காட்டும் கருவியும் வேலை செய்யவில்லை. இதனால் அந்த விசைப்படகில் இருந்த 31 மீனவர்களும் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.
மேலும் கடல் அலையின் சீற்றம் காரணமாக விசைப்படகு கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து சென்றுள்ளது. இதனால் வேறு மீனவர்கள் யாரும் அந்த வழியாக வரவில்லை. இதன்காரணமாக 31 மீனவர்களும் 11 நாட்கள் நடுக்கடலில் விசைப்படகில் பரிதவித்து கொண்டிருந்தனர். அவர்கள் உணவு பொருட்கள் வைத்திருந்ததால் அதனை வைத்து சமைத்து சாப்பிட்டு தங்களை யாராவது மீட்க வரமாட்டார்களா என ஏக்கத்துடன் காத்திருந்தனர்.
தற்போது கடலோர காவல் படையினர் வந்ததால், விசைப்படகில் பழுது சரி செய்யப்பட்டது. பின்னா் அதில் இருந்த 31 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து மற்றொரு மீன்பிடி விசைப்படகு வரவழைக்கப்பட்டு, கயிறு கட்டி பழுதான விசைப்படகு கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த படகு கார்வார் மாவட்டம் ஒன்னாவர் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 11 நாட்கள் நடுக்கடலில் புயல் காற்று, கனமழை, அலை சீற்றத்துக்கு மத்தியில் பரிதவித்த 31 மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பினர்.






