“என் ரசிகர்களுக்காக.. அடுத்த 33 வருஷத்துக்கு..” - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு


“என் ரசிகர்களுக்காக.. அடுத்த 33 வருஷத்துக்கு..” - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 27 Dec 2025 11:41 PM IST (Updated: 28 Dec 2025 4:24 AM IST)
t-max-icont-min-icon

வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.


நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே, விஜய் தனி விமானம் மூலமாக மலேசியா சென்றடைந்தார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 80 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விழாவில் அரசியல் சார்ந்த விஷயங்கள் எதுவும் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் விழாவில் பங்கேற்பதற்காக பகல் 1 மணி முதலே விஜய் ரசிகர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் இருந்து மைதானத்தின் முன்பாகக் குவியத் தொடங்கினர். மைதானத்தின் முன்பாக குவிந்த ரசிகர்கள் பலரும் மேள தாளங்களை இசைத்து, உற்சாகமாக நடனம் ஆடினர்.

மாலை 6 மணிக்குதான் இசை வெளியீட்டு விழா என்பதால், அதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்பட பாடல்களை வைத்து ‘தளபதி திருவிழா' என்ற பெயரில் சான்சார்ட் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் எஸ்.பி.பி.சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு உள்ளிட்ட பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று பாடல்களை பாடினர்.

மாலை 6.30 மணிக்கு மேல் விஜய், விழா நடைபெறும் மைதானத்திற்குள் வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். விஜய்க்கு வெற்றிப்படங்களை வழங்கிய இளம் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தனர். அவர்களுடன் ‘ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, நரேன், நாசர், பிரியாமணி மற்றும் இசையமைப்பாளர் அனிருத், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:-

நான் ஒரு சிறிய மணல் வீடு கட்டும் நம்பிக்கையுடன் சினிமா துறைக்குள் வந்தேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு அரண்மனையையே கொடுத்தீர்கள்.

என்னை பொறுத்தவரை, ஒரே ஒரு விஷயம்தான் முக்கியம். முதல் நாளில் இருந்து என்கூடவே இருந்தது என் ரசிகர்கள்தான். ஒருநாள்.. இரண்டுநாள் இல்லைங்க.. கிட்டத்தட்ட 33 வருஷத்துக்கு மேல என்கூடவே நின்னு இருக்காங்க.. அதனால் அடுத்த 30... 33 வருஷத்துக்கு அவங்ககூட நான் நிற்க முடிவு பண்ணியிருக்கேன்.

எனக்கு ஒண்ணுனா ரசிகர்கள் தியேட்டரில் நிற்குறாங்க.. நாளை அவங்களுக்கு ஒண்ணுனா அவங்க வீட்டுல போய் நிற்க முடிவு பண்ணியிருக்கேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த என் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன். இந்த விஜய் ரசிகர்களுக்காகவே நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன். இந்த விஜய் சும்மா 'நன்றி'ன்னு சொல்லிட்டு போறவன் கிடையாது. நன்றிக்கடன் தீர்த்துவிட்டுதான் போவேன்.

சில படங்களின் பெயர்களை கேட்டதும் மலேசியாவின் நினைவு வரும்... நண்பர் அஜித் நடித்த 'பில்லா' போல. நானும் `குருவி‘ போன்ற படங்களுக்கு வந்திருக்கிறேன். நமக்குதான் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆச்சே..

நான் அனிக்கு (அனிருத்) MDS என பெயர் வைக்கப் போகிறேன். Musical Departmental Store. அதை திறந்து உள்ளே போனால் என்ன வேண்டுமோ அதை எடுத்து வெளியே வரலாம். அனி என்னை ஏமாற்றியதே இல்லை. அது என் படமாக இருந்தாலும் சரி, மற்றவர்களின் படமாக இருந்தாலும் சரி... சிறந்த இசையை கொடுக்கிறார். படிப்படியாக ஏறி செல்கிறார்.

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்றால், உங்களுக்கு எப்போதும் நண்பர்கள் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வலிமையான எதிராளி நிச்சயம் தேவை. ஒரு வலிமையான எதிராளி இருக்கும்போது தான் நீங்களும் வலிமைமிக்கவராக ஆகிறீர்கள்.

விஜய் தனியா வருவாரா.. அணியா வருவாரா.. என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம். 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போதுகூட விளக்கம் போதவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சஸ்பென்சில்தான் கிக் இருக்கும்.

ஆகவே, 2026-ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது; மக்களுக்காக அதை வரவேற்க நாம் தயாராக இருப்போம். நன்றி, மலேசியா

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story