திருச்சியில் ரூ.120 கோடியில் வன உயிரியல் பூங்கா: மத்திய அரசின் ஒப்புதலுக்காக விரிவான திட்ட அறிக்கை அனுப்பி வைப்பு

தற்போது அந்த இடம் யானைகள் மறு வாழ்வு மையமாக விளங்கி வருகிறது.
திருச்சி,
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையம் என்ற இடத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வன உயிரியல் பூங்கா அமைக்க தமிழக அரசின் வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டது. சென்னை வண்டலூர் மிருக காட்சி சாலை வன உயிரியல் பூங்கா போன்று யானை, சிங்கம், புலி, மான் உள்பட வன விலங்குகள் மற்றும் பாம்பு, பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் இங்கு ஒரே இடத்தில் மக்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது.
முதல் கட்ட பணியாக சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் பின்னர் அந்த திட்டம் அப்படியே கைவிடப்பட்டது. வன விலங்குகள் மற்றும் உயிரினங்களை கொண்டு வருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், மத்திய அரசின் அனுமதி பெறுவதில் உள்ள சட்டப்பிரச்சினைகள் இதற்கு காரணமாக கூறப்பட்டது. தற்போது அந்த இடம் யானைகள் மறு வாழ்வு மையமாக விளங்கி வருகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள வயது முதிர்ந்த மற்றும் பராமரிக்க முடியாத யானைகள் இங்கு கொண்டு வரப்பட்டு வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.ஆர். பாளையத்தில் மீண்டும் வன உயிரியல் பூங்கா அமைப்பதற்கான பணியை திருச்சி மாவட்ட வனத்துறை கையில் எடுத்து உள்ளது. இதற்காக ரூ.120 கோடியில் விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரித்து அதனை மத்திய அரசின் உயிரியல் பூங்கா ஆணையத்தின் ஒப்பதலுக்காக அனுப்பி வைத்து உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அங்கு வன உயிரியல் பூங்கா செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்ட போது எம்.ஆர்.பாளையம் வன உயிரியல் பூங்கா சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி உள்பட அனைத்து வன விலங்குகளும் பொதுமக்களின் பார்வைக்காக கொண்டு வரப்படும். வனவிலங்குகளை எங்கிருந்து கொண்டு வரலாம் என்பது பற்றிய தகவல்கள் சேகரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்கான மாஸ்டர் பிளானிற்கு ஒப்புதல் கிடைத்த பின்னர் தான் அடுத்த கட்ட பணிகளை தொடர முடியும்.
விலங்குகள் தங்குவதற்கான இடங்கள், அவற்றிற்கான உணவுகள், சீதோஷ்ண நிலைக்கான மரங்கள் வளர்ப்பது, பொதுமக்கள் அமர்வதற்கான இடங்கள், அவர்கள் பாதுகாப்பாக உள்ளே வந்து விட்டு வெளியே செல்வதற்கான திட்ட வரையறை அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு உள்ளன என்றனர்.






