சென்னை, மதுரையில் நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியை பார்க்க டிக்கெட் இலவசம்

கோப்புப்படம்
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது.
14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், அர்ஜென்டினா உள்பட 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி 28-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சிலியை எதிர்கொள்கிறது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை பார்க்க டிக்கெட்டுகள் இலவசம் என ஆக்கி இந்தியா அறிவித்துள்ளது. www.ticketgenie.in என்ற இணையத்தளத்திலோ அல்லது ஆக்கி இந்தியாவின் அதிகாரபூர்வ செயலியிலோ பதிவு செய்து டிஜிட்டல் டிக்கெட்டுகளை பெற்று போட்டியை நேரில் பார்க்கலாம். ஒரு நபருக்கு 4 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், ‘இலவச டிக்கெட்டுகளை வழங்குவதன் மூலம் தமிழகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மாணவ, மாணவிகள், இளம் விளையாட்டு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், ஆக்கி பிரியர்களுக்கு போட்டியை நேரில் பார்ப்பதற்கான கதவினை திறப்பதே எங்களது இலக்கு. ஆர்வமுள்ள ரசிகர்களால் உருவாக்கப்படும் உற்சாகமான சூழல் எப்போதும் எங்களது மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. சர்வதேச ஆக்கியை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம்’ என்றார்.






