காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமா? - பரபரப்பு புகார்


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமா? - பரபரப்பு புகார்
x

‘தங்க பல்லி’ மாயமாகிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரங்கராஜ நரசிம்மன் புகார் அளித்தார்.

காஞ்சிபுரம்,

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதோடு கோவிலில் இருக்கும் ‘வெள்ளி பல்லி’, ‘தங்க பல்லி’ சிலைகளையும் தரிசனம் செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்கிடையில், ‘வெள்ளி பல்லி’ மற்றும் ‘தங்க பல்லி’ சிலைகளை மாற்றிவிட்டு புதிய சிலைகளை அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமாகிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. சம்பத் தலைமையில் 6-க்கும் மேற்பட்ட போலீசார் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்து, அங்குள்ள சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கோவிலில் பணிபுரியும் பட்டாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், மணியக்காரர், கோவிலின் நிர்வாக அறங்காவலர் உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வரதராஜ பெருமாள் கோவிலில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story