நீலகிரியில் கனமழை: மரம் முறிந்து விழுந்து காவல் நிலையம் சேதம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக அப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கூடலூரில் பெய்யும் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், கனமழையால் நீலகிரியின் குன்னூர் அருகே கேத்தி காவல் நிலையத்தின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில், காவல் நிலைய கட்டிடத்தின் முன்பகுதி சேதமடைந்தது. மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. போர்க்கால அடிப்படையில் அவை அகற்றப்பட்டு வருகின்றன. வட்டவயல் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 28 பழங்குடியினர் பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவலாஞ்சியில் இருந்து குந்தா செல்லும் வழியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை மாவட்டத்தில் வால்பாறை, ஸ்டேன்மோர், பழைய வால்பாறை, வில்லோனி, ஐயர்பாடி, சோலையாறு அணை, சேக்கல் குடி போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. வால்பாறை அருகே வரட்டு பாறை என்ற பகுதியில் மரம் சாய்ந்து மின்கம்பத்தில் விழுந்ததில் வீடு ஒன்று பாதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேவேளை, கோவை, நீலகிரியில் வரும் 29, 30 தேதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






