கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா' புயல் காரணமாக சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்திலும் இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.
மேலும் நேற்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்த நிலையில் சென்னையையொட்டிய கடல் பகுதிகளிலேயே தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுகுறைந்து போனது. இருப்பினும் மழையானது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதேபோல், ராணிப்பேட்டை (அரக்கோணம், நெமிலி வட்டம்), கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (புதன்கிழமை) அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






