விஏஓ பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஏஓ பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
Published on

மதுரை:

தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அகமது ஃபயஸ் ஆகியோர் ஐகோர்ட் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப செப்.1 முதல் 15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கிய பிறகு காலியுள்ள கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம்.

ஏற்கெனவே கிராம நிர்வாக அலுவலர்களின் முதுநிலை பட்டியலை கருத்தில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த தேதி அடிப்படையாகக் கொண்டு மாவட்ட மாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவது தவறு எனக் கூறி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில் 218 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப முடிவு செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அரசு பட்டியலை அனுப்பியுள்ளது. இதனால் இடமாறுதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை மாவட்ட பணியிட மாறுதல் மூலம் நிரப்பாமல் நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்தும், தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதல் கோரிய மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு உரிய இடங்களில் இடமாறுதல் வழங்கிய பிறகு நேரடி முறையில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி குமரேஷ்பாபு விசாரித்தார். பின்னர் நீதிபதி, மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி முறையில் டிஎன்பிஎஸ்சி நிரப்ப தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக வருவாய் துறை ஆணையர், டிஎன்பிஎஸ்பி தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.14-க்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com