சென்னை விமான நிலையத்தில் 2 நாட்களில் பல கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்

தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த நபரை பரிசோதனை செய்ததில், 10 கிலோ எடை கொண்ட உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்று விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பும் பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் சென்னையை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்றுவிட்டு திரும்பி வந்திருந்தார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், வாலிபரிடம் இருந்த சூட்கேசை பரிசோதித்தனர். அதில் பதப்படுத்தப்பட்ட உணவு என காற்று புகாத பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் வைத்திருந்தார். அவற்றை பிரித்து பார்த்தபோது உயர் ரக, பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது.
அவரிடம் இருந்து ஏறக்குறைய ஒன்றரை கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அவரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து, இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வடஇந்திய மாநிலத்தில் இருந்து வந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர், அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணான பதில்களை கூறினார். இதனை தொடர்ந்து அவரை பரிசோதனை செய்ததில், உடைகளின் உள்ளே 10 கிலோ எடை கொண்ட உயர் ரக கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது. அவர் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா விசாவில் சென்று திரும்பும்போது இந்த கடத்தல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. கமிஷன் அடிப்படையில் இந்த நபர் வேலை செய்துள்ளார். இதனால், சென்னை விமான நிலையத்தில் 2 நாட்களில் பல கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது.






