செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன்: அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா

செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா கூறினார்.
சென்னை,
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனையடுத்து அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி அன்னூரில் பாராட்டு விழா நடந்தது.
இதில் மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெறவில்லை எனக்கூறி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அந்த விழாவை புறக்கணித்தார். அதைத்தொடர்ந்து பாஜகவுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார்.
ஆனால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் தெரிவித்து வந்தார். இதையடுத்து பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் கூட்டணி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார்.
அதன்பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில் ஆதரவாளர்களுடன் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் சத்தியபாமா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
“உடல்நிலை சரியில்லாததால் நேற்று செங்கோட்டையன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அந்த வெற்றியை நாம் அறுவடை செய்ய வேண்டும்.
5-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன். கட்சி நன்றாக இருக்க வேண்டும்; ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே செங்கோட்டையனின் எண்ணம். எப்போதுமே அதைப்பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள். கட்சி நலன் சார்ந்து 2026 தேர்தல் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்” என்று கூறினார்.






