பாரதி இன்று இருந்திருந்தால்..பிரதமர் மோடிக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சவுந்தரராஜன்

பாரதியாருக்கு சாதியை வைத்து திமுக அரசு இதுவரை விழா எடுக்கவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை,
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் பாரதியாரை நினைவு கூர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் பாரதியார் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் நேரத்தில் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வந்தே மாதரம் 150வது ஆண்டு விவாதத்தில் பாரதியார் மற்றும் வ.உ.சியை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி.
இந்தியாவில் எந்த பிரதமரும் பாரதியாருக்கும், வ.உ.சி-க்கும் மரியாதை செலுத்தியதே கிடையாது. ஒருவேளை பாரதியார் இன்று இருந்திருந்தால், பிரதமர் மோடியை வாழ்த்தி பாடல் பாடி இருப்பார். ஏனென்றால் தேசியத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தி வருகிறார். அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய கொடியை கூட திமுக ஏற்றியதே இல்லை. ஆனால் தேசப்பற்று பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தேச பக்தர்கள் போல் திருச்சி சிவா போன்றோர் நாடகமாடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி காசியில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்கு ஏராளமான விஷயங்களை மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால் திமுக இதுவரை பாரதியாருக்கு அரசு விழாவை எடுக்கவில்லை.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற பின், பாரதியாருக்கு பிரதமர் மோடி முன்னிலையில் பிரம்மாண்ட அரசு விழா நடத்தும். அதற்கான கோரிக்கை நிச்சயம் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக முத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பல்லக்கு சுமந்து சென்றனர்.
இதனிடையே பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பதிவில்,
நன்றி பாரதப் பிரதமர் அவர்களே... தாங்கள் பாரதியாரின் வந்தே மாதரம் பாடலை பாராளுமன்றத்தில் ஒலித்ததை விண்ணில் இருந்து அவர் கேட்டு மகிழ்ந்திருப்பார் என அதில் பதிவிட்டுள்ளார்.






