அண்ணா பல்கலை. வழக்கில் தி.மு.க. அரசு யாரை காப்பாற்ற துடிக்கிறது? - அண்ணாமலை கேள்வி


அண்ணா பல்கலை. வழக்கில் தி.மு.க. அரசு யாரை காப்பாற்ற துடிக்கிறது? - அண்ணாமலை கேள்வி
x
தினத்தந்தி 3 Jun 2025 2:09 PM IST (Updated: 3 Jun 2025 5:52 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகருக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு நேற்று (ஜூன் 2) தீர்ப்பளித்தது.

இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, சென்னை கோர்ட்டு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

"அனைவருக்கும் வணக்கம். நான் இந்த காணொலி வாயிலாக உங்களிடம் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். கடந்த ஆண்டு டிச.23ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது நமக்கு தெரியும். இந்த வழக்கில் 24,25ம் தேதியில் ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து பேசியதை அடுத்து 25ம் தேதி மாலை ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். அன்றைய தினம் இரவு ஞானசேகரன் யார்? எந்த கட்சியை சேர்ந்தவர்?? யார் யாருடன் தொடர்பு உள்ளது? என்பதை உங்கள் முன்னால் வைத்தோம்.

அனைத்து அரசியல் கட்சியினரும் இதுகுறித்து பேசினர். நான் அரசியல் பேச வரவில்லை. தற்போது, CDR (Call Detail Record) ஆதாரத்தின் அடிப்படையில் பேசப்போகிறேன். இன்று பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஞானசேகரன் 25ம் தேதி கைது செய்யப்பட்ட நிகழ்ந்த சில நிகழ்வுகளை நாம் பார்த்தோம். எஃப்ஐஆர் கசியவிடப்பட்டது. 27ம் தேதி நான் ஒரு அறப்போராட்டத்தை முன்னெடுத்தேன். பிறகு அண்ணா பல்கலைக்கழகம் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக தெரிவித்தனர். சென்னை ஐகோர்ட்டு எஸ்ஐடி (SIT) மூலம் கண்காணிக்க தொடங்கினர். தற்போது 5 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பு வந்துள்ளது. அன்று பேசியதை தான் இன்றும் பேசப்போகிறேன்.

குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அந்த வேலையை முழுமையாக செய்துள்ளதா என்பதைத்தான் அன்றிலிருந்து கேட்டுக்கொண்டுள்ளோம். அதைப்பற்றி தான் தற்போது பேசப்போகிறேன். டிச.23ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது. 24ம் தேதி போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர். பின்னர் அவரை விட்டு விட்டனர். தொடர்ந்து, 25ம் தேதி மீண்டும் அவரை கைது செய்தனர். இதனை நான் உங்கள் முன்னால் வைக்கிறேன். ஏன் அவரை வெளியே விட்டார்கள்? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? எதற்காக திமுக வில் சிலருக்கு பதற்றம்? எங்கெல்லாம் ஆதாரத்தை அழித்திருக்க வாய்ப்புள்ளது?

ஞானசேகரன் கிராவிட்டி பிரியாணி என்ற கடையை நடத்தி வந்தார். சம்பவம் நடந்த பொழுது ஞானசேகரன் பயன்படுத்திய அலைபேசி எண் 9042**7907 இதுதான். சம்பவம் நடந்த அன்று இரவு 8.52 மணி வரை ஞானசேகரனின் செல்போன் ஃபிளைட் (Airplane Mode) மோடில் இருந்ததாக கூறியிருந்தார். உண்மைதான், ஃபிளைட் மோடில் தான் இருந்தது.

சிடிஆரும் (CDR) அதைதான் கூறுகிறது. ஃபிளைட் மோடில் எடுத்த பிறகு சரியாக 8.55க்கு ஞானசேகரன் முதலாவதாக ஒரு காவல் அதிகாரிக்கு கால் செய்துள்ளார். சம்பவம் நடந்த பிறகு ஞானசேகரன் ஏன் காவல் அதிகாரிக்கு கால் செய்தார்? பின்னர் 6 நிமிடங்கள் கழித்து 9.01க்கு காவல் அதிகாரி ஞானசேகரனுக்கு போன் செய்தார். எதற்காக? இதுகுறித்து விசாரணை செய்தீர்களா? மே 16ம் தேதி ஞானசேகரன் மீது சிபிசிஐடி இரண்டாவது எஃப்ஐஆரை பதிவு செய்தனர். இதுபோல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனரா? அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்று வேறு ஏதேனும் சம்பவம் நடந்துள்ளதா? மே 16ம் தேதி பதிவு செய்த எஃப்ஐஆரை ரகசியமாக வைத்துள்ளனர்.

குற்றம் செய்த பிறகு டிச. 24ம் தேதி அந்தப்பகுதி வட்டச்செயலாளர், திமுகவின் மூத்த தலைவர் கோட்டூர் சண்முகத்துடன் சுமார் 6 முறை ஞானசேகரன் போனில் பேசியதாக சிடிஆர் கூறுகிறது. அன்றைய தினம் காலை 7.27 முதல் மாலை 4.01 வரை 5 முறை பேசினர். அதன்பிறகுதான் போலீசார் ஞானசேகரனை கோட்டூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் கோட்டூர் சண்முகமும், ஞானசேகரனும் பேசினர். அன்றைய தினம் எதற்காக ஞானசேகரனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்? பின்னர் ஏன் வெளியே விட்டீர்கள்? ஆதாரங்களை அழிக்கவா?

அன்றிரவு ஞானசேகரன் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபிறகு 8.30 மணிக்கு கோட்டூர் சண்முகமும், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் பேசினர். பின்னர் இருவரும் மீண்டும் 8.32 மணிக்கு பேசினர். எதற்காக? யாரை காப்பாற்ற இவ்வளவு பதற்றம்? அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரி நடராஜன் என்பவரும், கோட்டூர் சண்முகமும் டிச.23,24,25,26 ஆகிய 4 நாட்கள் பேசினர். இந்த நாட்களில் இருவரும் 13 முறை பேசி இருக்கின்றனர். முன்னதாக கூறியதுபோல், டிச.24 அன்று ஞானசேகரன் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபிறகு 8.34க்கு கோட்டூர் சண்முகமும், ஞானசேகரனும் பேசினர். பின்னர். 8,59க்கு கோட்டூர் சண்முகம் வேறொரு காவல் அதிகாரிக்கு போன் செய்தார்.

தொடர்ந்து, 9.07க்கு மீண்டும் கோட்டூர் சண்முகம் காவல் அதிகாரியிடம் பேசினார். இதெல்லாம் டிச. 24ம் தேதி இரவில் நடந்தது. அன்று ஆதாரம் அழிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஞானசேகரன் ஆதாரத்தை அழித்திருக்கிறார். நான் புதிதாக எதையும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் எஸ்ஐடி பதிவு செய்த எஃப்ஐஆரில் ஆதாரத்தை அழித்ததற்காக ஒன்றை போட்டுள்ளனர். என்ன ஆதாரம் அழிக்கப்பட்டது? ஞானசேகரனை கைது செய்த பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என சொல்கின்றனர். ஞானசேகரன் மற்றொரு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது மே16ம் தேதி தான் தெரிகிறது

அதைப்பற்றி நாம் பெரிதாக பேசவில்லை. கோட்டூர் சண்முகம், அவர் பேசிய காவல்துறை அதிகாரி, அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினீர்களா? அதே 24ம் தேதி இரண்டு காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து எஃப்ஐஆர் வேண்டாம் என்றும் எஃப்ஐஆர் போட்டால், வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடும் எனவும் கூறியதாக அவரின் தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். இதை அனைத்தையும் நான் உங்கள் முன்னால் கொண்டு வந்திருக்கிறேன். இன்னக்கி நாம் கேட்கக்கூடிய கேள்விகள் யார் அந்த சார்? அதே கேள்வியை நாம் திரும்ப கேட்கிறோம்.

இவை அனைத்தும் சிடிஆரில் உள்ளது. தனியாக Whatsapp-ல் என்ன பேசினார்கள் என்று நமக்கு தெரியாது. கோட்டூர் சண்முகம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டிய நபர். இதை ஏன் முதலமைச்சர் மறைக்கிறார்? டிச.24ம் தேதி பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அங்குதான் யார் அந்த சார்? ஒளிந்திருக்கிறார். நான் எதற்கும் பயப்பட மாட்டேன். நான் இதனை விடமாட்டேன். தொடர்ந்து கேள்விகள் கேட்போம்" என தெரிவித்துள்ளார்.



1 More update

Next Story