பார்வையற்றோர் பெண்கள் உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கோப்புப்படம்
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
பார்வையற்றவர்களுக்கான முதலாவது பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லி மற்றும் கொழும்புவில் நடைபெற்றது. இந்த தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தின. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்ட இந்த தொடர், கடந்த நவம்பர் 11-ம் தேதி டெல்லியில் தொடங்கியது.
இந்த தொடரின் இறுதிப்போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே அடித்தது.
பின்னர் 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் பார்வையற்றவர்களுக்கான முதலாவது பெண்கள் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "துணிவு வழிநடத்தும்போது வரலாறு உருவாகிறது! முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற சிறப்பான நமது பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்!" என்று தெரிவித்துள்ளார்.






