மேட்ரிமோனியில் அறிமுகம்: இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து, பணம் நகையை பெற்று வாலிபர் மோசடி

கோப்புப்படம்
தொழில் தேவைக்காக எனக் கூறி இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம், 2.5 பவுன் நகையை வாங்கியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், கோவை ஒண்டிப்புதூரில் தனது 2 மகன்களுடன் வசித்து துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 16 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு அவரது கணவர் இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரது சகோதரி அவருக்கு மேட்ரிமோனி மூலம் 2-வது திருமணத்துக்கு மணமகன் தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த 38 வயது வாலிபர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, தனக்கு திருமணமாகவில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். பின்னர் இருவரும் பழகி வந்தனர். இதனிடையே அவர் தொழில் தேவைக்காக எனக் கூறி அந்த பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் மற்றும் 2.5 பவுன் நகையை வாங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்த வாலிபர், அவரை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். அவரிடம் பணம் மற்றும் நகை குறித்து கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரது பெற்றோரும் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணமானதும், இதேபோல் வேறு ஒரு பெண்ணை ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் உள்ளதும் தெரிய வந்துள்ளது.






