முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பெயரை மாற்றத் தயாரா..? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

தி.மு.க. எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தற்போதைய தி.மு.க. ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதன்முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்த நிலையில் தேவநாகரி எழுத்தில் உள்ள ரூபாய் குறியீட்டை மாற்றி 'ரூ' என்ற தமிழ் எழுத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய இலட்சினையை வெளியிட்டார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்து நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் இலட்சினையில் தேவநாகரி எழுத்தான '₹' குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான இலட்சினையில் இந்த குறியீடு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன்படி ஒரு தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை தி.மு.க. அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பெயரை மாற்றத் தயாரா..? என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும். தி.மு.க. அரசின் தோல்விகளை மறைக்க அவர்கள் போடும் நாடகம் தொடர்கிறது.
தமிழ்நாட்டை எத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளார்கள்? இப்போது ஏன் ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளார்கள்?
தி.மு.க. எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுகிறது. தேச விரோத மனநிலையுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.