எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

நானும், ராஜன் செல்லப்பாவும் கூட மூத்த நிர்வாகிகள்தான் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
மதுரை,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ஈரோட்டில் பேசிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்றார். அவரை நீக்கியதற்கான காரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியும் இன்று விளக்கம் அளித்து உள்ளார்.
இந்நிலையில், மதுரையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடையே பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை விட முன்னால் பிறந்ததால் செங்கோட்டையன் மூத்த நிர்வாகியாகி விடுவாரா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர், செங்கோட்டையன் முன்னால் பிறந்தார். இதனை தவிர எல்லா தகுதிகளும் பழனிசாமிக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என கூறினார்.
நானும், ராஜன் செல்லப்பாவும் கூட மூத்த நிர்வாகிகள்தான் என்று கூறிய அவர், ஜெயலலிதா இருக்கும்போதே செங்கோட்டையன் முதல்-அமைச்சராக விரும்பியவர். அதனால், செங்கோட்டையன் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டவர் என்று கூறினார்.






