தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி அமுதா (வயது 41). இவர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அங்குள்ள ஒரு கடையில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த சுமார் 28 வயது மதிக்கப்பட்ட ஒரு வாலிபர், அமுதா கழுத்தில் அணிந்திருந்த 3½ சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா கூச்சலிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து அமுதா மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு டெலிபோன் காலனியைச் சேர்ந்த செல்வம் மனைவி கிறிஸ்டி(30). இவர் நேற்று முன்தினம் இரவு டியூஷனில் இருந்து மகனை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






