கரூர் சம்பவம்: எஸ்.பி, ஆட்சியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் - அண்ணாமலை

கரூர் சம்பவத்தில் விஜய்தான் குற்றவாளி என்ற கருத்தை ஏற்க முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர்,
கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
மக்களை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை உண்டு. தனது தலைவரை சந்திக்க மக்களுக்கும் உரிமை உள்ளது. தனக்கென கூடும் மக்கள் கூட்டத்தை சந்திக்க விஜய் வருகிறார். அவருக்கும் மக்களை சந்திக்க உரிமை உள்ளது. ஒரு சதுர அடியில் 2 பேர்தான் நிற்க வேண்டும்.. 5 பேர் நின்றால் நெரிசல் வரத்தான் வேண்டும். 40 அப்பாவி மக்களை பறிகொடுத்துள்ளோம். இந்த சம்பவத்தை பார்த்து விஜய் மிகுந்த வருத்தத்தில்தான் இருப்பார். அவரை யாரும் கார்னர் செய்ய வேண்டாம்.
விஜய்க்கு சரியான இடத்தை அரசு வழங்கவில்லை. கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. தமிழக அரசுக்கு கூட்டத்தையும் சட்டம் ஒழுங்கையும் கட்டுக்குள் கொண்டுவர தெரியவில்லை. விஜய்தான் குற்றவாளி என்ற கருத்தை ஏற்க முடியாது. கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது.
10 ஆயிரத்தும் மேல் கூட்டம் கூடும்போது எஸ்பி சம்பவ இடத்துக்கு வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை? இந்த சம்பவத்துக்கு அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். ஆட்சியர், எஸ்.பி.யை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
யாருக்கும் தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக சனிக்கிழமைகளில் பிரசாரம் என்கிறீர்கள். வார இறுதியில் பிரசாரம் செய்வதால் சிறுவர்கள், பெண்கள் வரத்தான் செய்வார்கள். வார இறுதியில் பிரசாரம் செய்ததால் பெண்கள் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எல்லா மக்களுக்கும் ஆதரவாக விஜய் இருக்க வேண்டும்
நாம் வளர்ந்த மாநிலம். படித்தவர்கள் அதிகம் இருக்கும் மாநிலம். எதற்காக இப்படி, கோவில், மரம் மேல் ஏறி நிற்க வேண்டும். உங்கள் தலைவரை பார்க்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அதைவிட உங்களின் பாதுகாப்பு முக்கியம். உங்கள் குடும்பத்துக்கு நீங்கள்தான். நீங்கள் போய்விட்டால் உங்கள் குடும்பத்துக்குத்தான் இழப்பு.
தயவுசெய்து இதுபோன்ற சூழலை ஏற்படுத்தாதீர்கள். இளைஞர்கள், பெண்கள்.. பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு செல்லாதீர்கள். முதலும், கடைசியுமாக இந்த சம்பவம் இருக்கட்டும். இனி இதுபோன்று அரசியல் மாநாட்டில் சம்பவம் நடைபெற்றால் அரசியல் கட்சிகள் வெட்கி தலைகுனிய வேண்டும்.
தாமதமாக வருவார் என விஜய்யை குற்றம் சொல்ல முடியாது. 3 மணி முதல் 10 மணிக்குள் வருவார் என அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்சி தலைவர் வரவில்லை என்றால் பிரசாரம் செய்ய அனுமதிக்காதீர்கள். விஜய் பிரசார பயணத்தின் வடிவமைப்பில் கோளாறு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டும். கரூர் மாவட்ட பாஜக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.”
இவ்வாறு அவர் பேசினார்.






