கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டம்?

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டம்?
Published on

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், மத்திய மின்துறை நிறுவனத்தின் அதிகாரிகள் என ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் நெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே த.வெ.க. சார்பில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கரூர் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு திருச்சி கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே 2 பெண் சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை குழுவில் இணைந்துள்ளனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை திருச்சி கோர்ட்டில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணியில் அவர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com