காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பா.ஜ.க. அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி - சீமான் கண்டனம்


காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பா.ஜ.க. அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி - சீமான் கண்டனம்
x

கோப்புப்படம் 

காஷ்மீர் மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்றிருந்த அப்பாவி பொதுமக்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் சிறிதும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இத்தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது.

இத்தனை ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தும், 24 மணிநேரமும் உளவுத்துறையால் திறந்தவெளி சிறைபோல காஷ்மீர் முழுவதும் கண்காணிக்கப்பட்டும் ராணுவ சீருடை அணிந்து பயங்கரவாதிகள் பொதுவெளியில் சுதந்திரமாக உலவக்கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால் இந்தியப் பாதுகாப்புத்துறையும், உளவுத்துத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது?

இக்கொடிய நிகழ்வு இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாதுகாப்புத்துறை தோல்வியாகும். இந்த நாட்டில் உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அல்லது தாக்குதல் நடைபெறட்டும் என்று வேடிக்கை பார்த்ததா? என ஐயம் எழும் அளவிற்கு முற்று முழுதாக ஒன்றிய அரசின் உளவுத்துறை செயலிழந்து போயுள்ளது.

இதுபோன்ற இரக்கமற்ற கொடுந்தாக்குதல்கள் இனியும் நடைபெறா வண்ணம் தடுத்து, நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியதும், காஷ்மீரில் அமைதி, பாதுகாப்பானச் சூழலை உறுதிசெய்து, அங்கு வாழும் மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் காஷ்மீர் மாநில அரசின் முழுமுதற் கடமையாகும்.

இக்கொடியத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story