கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்
Published on

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் கடந்த ஜூலை 27-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துவந்ததால், காதலியின் சகோதரர் சுர்ஜித், கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். பின்னர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல் சப்-இன்ஸ்பெக்டர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தைத் தொடர்ந்து, சுர்ஜித்தின் பெற்றோரை இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையினர் சேர்த்தனர். வழக்கின் விசாரணை காரணமாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்கில் விரிவான விசாரணைக்காக சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணையில் ஆக. 13ஆம் தேதி வரை சுர்ஜித்தையும் அவரின் தந்தை சரவணனையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் 5 நாட்கள் கேட்ட நிலையில் 2 நாட்கள் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com