பெண்ணை கொன்ற புலியை பிடிப்பதற்காக வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூண்டில் சிக்கிய சிறுத்தையை வன ஊழியர்கள் உடனடியாக அதே பகுதியில் திறந்து விட்டனர்.
பெண்ணை கொன்ற புலியை பிடிப்பதற்காக வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை
Published on

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி அருகே மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் நாகியம்மாள் (69 வயது). இவர் கடந்த மாதம் 24-ந்தேதி அதே பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த புலி ஒன்று நாகியம்மாளை அடித்து கொன்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர், போலீசார் புலியை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் 5 இரும்பு கூண்டுகளை வனத்துறையினர் வைத்து கண்காணித்து வருகின்றனர். தினமும் காலையில் வன ஊழியர்கள் கூண்டுகளை பார்வையிட்டு வந்தனர். ஆனால், இதுவரை புலி சிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வன ஊழியர்கள் கூண்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கூண்டில் சிறுத்தை சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் செய்வதறியாது திகைத்தனர். தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் உத்தரவின்பேரில், கூண்டில் சிக்கிய சிறுத்தையை வன ஊழியர்கள் உடனடியாக அதே பகுதியில் திறந்து விட்டனர்.

இதனால் தப்பித்தோம்... பிழைத்தோம்... என சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதனிடையே கூண்டில் புலி சிக்கி விட்டதாக தகவல் பரவியது. இதனால் கிராம மக்கள் அங்கு திரண்டனர். அப்போது கூண்டில் சிக்கியது சிறுத்தை எனவும், உடனடியாக விடுவிக்கப்பட்டது என்றும் வனத்துறையினர் விளக்கம் அளித்தனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இனி வரும் நாட்களில் கூண்டில் எந்த வனவிலங்குகள் சிக்கினாலும், அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடுவதாக வனத்துறையினர் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, புலிக்கு வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு 2 வயது இருக்கலாம். உடனடியாக வனப்பகுதியில் விடப்பட்டது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com