''அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா'' - வைரமுத்து

ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
சென்னை,
வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
''உலகின் தலையில் மெல்லிய இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது அணுகுண்டு . "வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்" கலங்குகிறது உலகு. ஈரானின் அணுசக்தித் தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள் வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா. வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி.
தான் கட்டமைத்த நாகரிகத்தைத் தானே அழிப்பதன்றி இதுவரை போர்கள் என்ன செய்தன?. போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். அணுகுண்டு முட்டையிடும் அலுமினியப் பறவைகள் அதனதன் கூடுகளுக்குத்
திரும்பட்டும்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கிடையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது.






